Saturday 17 September 2011

மவ்தூதியை மகானாக்க முயலும் ஜமாஅதே இஸ்லாமியின் முரீதுகள்

We provide free floor to wider readers, to exchange their information with difference of opinions. But do not support any form of blind allegiances. (Takleedh). (Admin)

சத்திய இஸ்லாத்தின் அறிவார்ந்த கருத்துக்களை, தங்கள் கைச்சரக்குகள் மூலம் திரிபுபடுத்தி,முஸ்லிம் சமுதாயத்தின் ஈமானிய அடிப்படையை தகர்த்தெரியும் தரம் கெட்ட திட்டங்களை லாவகமாய் நிறைவேற்றும் தீய சக்திகள் வரலாறு நெடுகிலும் வளர்ந்து வந்திருப்பது உலகறிந்த பேருண்மை.

இஸ்லாத்தை ஒழிப்பதற்காய் இஸ்லாமிய முழாம் புசிய கோடாரிக் காம்புகளை அதற்குள் இருந்தே உற்பத்தி செய்து உலாவிடும் போக்கு யுதர்கள் கைக்கொண்டு வரும் பிரதான உக்திகளில் ஒன்று. இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கையான ஏகத்துவம், தூதுத்துவம் உள்ளிட்ட அம்சங்களில் சீர் கெட்ட சிந்தனைகளை நுழைத்து, முஸ்லிம் சமுதாயத்தை கூறுபோடுவதற்காய் உருவாக்கப்பட்ட சில கோடாரிக் காம்புகளே ஷீயாக்களும் தரீகாக்களும் ஆகும்.

தங்கள் தரீகத்துத் தலைவரை நபியின் ஸ்தானத்துக்கு உயர்த்தி, அவருக்குள் இறைபுறத்திலிருந்து வஹி வருகிறது எனும் போலித் தோற்றத்தை ஏற்படுத்தி, நரகிலிருந்து தற்காப்புப் பெறவேண்டுமாயின் தங்கள் தலைவரான ஷைஹூ நாயகத்துக்கு பைஅத் செய்து முரீதாக மாற வேண்டும் எனும் விஷக் கருத்தை உள்ளத்தில் விதைத்து, வழிகேட்டுக்கு பாதை அமைத்தோரே இந்த ஷீயாக்களும் தரீகாவாதிகளும்.

தாம் சார்ந்த தரீகாவின் கருத்துக்கள் சமுதாயத்தில் சரிகாணப்பட வேண்டுமாயின், தமது தரீகா தலைவர்களை பெரும் ஆன்மீக வாதிகளாகவும், இறைநேசச் செல்வர்களாகவும் சித்தரித்து வழிகேட்டுக்கு ஆன்மீகச் சாயல் புச வேண்டிய அவசியம் இவர்களுக்கு ஏற்பட்டன. இதன் விளைவே நபிகளாரை மிஞ்சிய மகான்களாக, கராமத்துக் காட்டும் புனிதர்களாக ஸூபியாக்கள் எனும் வழிகேட்டுக் கும்பல் உருவாக்கப்பட்டமை.

எப்படி தரீகா வாதிகள் தங்கள் நச்சுக்கருத்துக்களை விதைப்பதற்காக தம் ஸ்தாபகர்களை பெரும் ஆன்மீக வல்லமை பெற்ற மகான்களாக சித்தரிக்க முற்பட்டனரோ, அதே பாணியில் இன்று நடைபயிலும் ஒரு நவீன தரீகா அமைப்பே “ஜமாஅதே இஸ்லாமி” ஆகும்.

ஜமாஅதே இஸ்லாமி எனும் தங்கள் அமைப்பின் கருத்துக்களை நிலைநாட்டுவதற்காக, அதன் ஸ்தாபகர் மவ்லானா மவ்தூதியை மகானாக்க முயன்றமை இவர்களும் தரீகாவாதிகளும் ஒன்றுதான் என்பதற்கு தக்க சான்றாக உள்ளது. மவ்லானா மவ்தூதியின் வாழ்க்கை வரலாற்றை அவர் மகள் ஹூமைரா மவ்தூதி ‘அல்முஜ்தமஃ’ எனும் அரபுச் சஞ்சிகையில் தொடராக எழுதுகிறார். அதனை தமிழுக்கு மொழியாக்கம் செய்திருக்கிறார் இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் அமீரான ரஷீத் ஹஜ்ஜூல் அக்பரின் மூத்த மகன் அப்துல் ஹலீம் (நளீமி). இம்மொழியாக்கம் “வேர்களை வாசிக்கும் விழுதுகள்” என்ற பெயரில் இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் அமீர் ஹஜ்ஜூல் அக்பரின் அணிந்துரையுடனும், அஷ்ஷெய்க் அகார்முஹம்மத் (நளீமி) அவர்களின் மதிப்புரையுடனும் அல்ஹஸனாத் பதிப்பகத்தால் வெளியிடப் பட்டுள்ளது.

இந்நூல் தங்கள் இயக்க ஊழியர்கள் அவசியம் வாசித்தாக வேண்டிய நூற்களில் ஒன்றாக உயர் பீடத்தால் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். மவ்தூதியின் வாழ்க்கை நிகழ்வுகளை விபரித்துக் கொண்டு வரும் சாட்டில், இஸ்லாத்தின் அடிப்படையை தகர்க்கும் ஸூபித்துவ வாடை வீசும் தரீகத்து நரித்தந்திரத்தை இந்நூலில் சுசகமாக உள்நுழைத்துள்ளமை வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய வழிகேட்டுப் போக்காகும்.

காதியானிகளுக்கு எதிராக கட்டுரை எழுதி சிறையில் அடைக்கப்படுகிறார் மவ்தூதி. மவ்தூதியின் சிறைவாசத்தின் போது, அவாpன் மீது தீவிர பக்தி கொண்ட ஒரு சீடர் உரங்கும் போது ஒரு கனவு காண்கிறார். அக்கனவு குறித்த விபரம் மேற்படி புத்தகத்தில் பின்வருமாறு பதியப்பட்டுள்ளது.

“நீதி மன்றம் ஷேய்க் அபுல் அஃலா மௌதூதி அவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்த போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை கனவில் கண்டேன். அவர்அல்லாஹ்விடம் இவ்வாறு பிரார்த்தித்துக் கொண்டிருந்தார். ‘யா அல்லாஹ்,நிச்சயமாக மௌதூதி எனது மார்க்கத்தின் பக்கம் மக்களை அழைப்பவராக இருக்கின்றார். உன்னுடைய மார்க்கம் ஓங்க வேண்டும் என்பதற்காக உழைக்கிறார்.எனவே, யா அல்லாஹ், அவரது உயிரைக் காப்பாற்றுவாயாக!’. அப்போது திடீரென்று ஒரு சப்தத்தைக் கேட்டேன். “முஹம்மதே! உம்முடைய துஆ ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது”என்பதே அந்த சப்தமாகும்.”

(நூல்: வேர்களை வாசிக்கும் விழுதுகள் பக்கம்: 53,54)

மேற்படி சம்பவத்தை இந்நூலில் குறிப்பிடுவதன் மூலம் ஜமாஅதே இஸ்லாமி எதிர் பார்ப்பது என்ன? ‘எல்லாம் அல்லாஹ்’ எனும் அத்வைத சித்தாந்தத்தை வரிந்துக்கட்டிக் கொண்ட தரீகாக்கள் எப்படி தம் ஸூபிமகான்களை இறை நேசர்களாகவும், இறைவனை கனவில் தரிசிப்பவர்களாகவும் சித்தரித்தனவோ, அல்லாஹ்வோடு கனவில் பேசிய பெரியார்கள்,நபிகளாரை கனவில் கண்ட ஞானவான்கள் என்று தப்லீக் தஃலீம் தொகுப்பில் ஜகரிய்யா ஸாஹிப் எப்படி உலரிக் கொட்டியுள்ளாரோ, அதற்கும் ஜமாஅதே இஸ்லாமியின் மவ்தூதி குறித்த இந்தக் குறிப்புக்கும் என்ன வித்தியாசம் தான் உண்டு? தரீகா, தப்லீகைப் போன்று கப்ஸாக்களை கட்டவிழ்த்து விடும் ஜமாஅத்தினரே நாங்கள் என்பதை ஜமாஅதே இஸ்லாமி இங்கு அடையாளப்படுத்தியுள்ளது.

தமது இயக்க ஸ்தாபகரின் மேல் மவுஸை ஏற்படுத்துவதற்காக எழுதப்பட்ட இக்குறிப்பில் உட்பொதிந்துள்ள வழிகேட்டுக்கருத்துக்கள், மார்க்கத்தின் அடிப்படையை தகர்ப்பவையாக இருப்பது ஏனோ இந்த ஞான சுனியங்களின் கண்களுக்குப் படவில்லை. இஸ்லாத்தின் மேல் உள்ள பிடிப்பை விட தம் இயக்கத்தின் மேல் உள்ள குருட்டு பக்தியானது வழிகேட்டைக் கூட சரிகாணும் அளவுக்கு இவர்களை இட்டுச் சென்றுள்ளது. மவ்தூதியை மகானாக்க முயலும் இக்குறிப்பிலுள்ள அபத்தங்களை இப்போது பார்ப்போம்.
அபத்தம் - 01

01- நபிகளாரை கனவில் காண முடியுமா?

ஒருவர் இறை நேசராக ஆகிறார் என்றால் அதற்கான அடையாளம் நபிகள் நாயகத்தைக் கனவில் காண்பது தான் எனவும் மார்க்க அறிவு குறைந்த சிலர் நினைக்கின்றனர். இந்தப் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றுப் பேர்வழிகள் தாங்கள் கனவில் நபிகள் நாயகத்தைக் கண்டதாகப் புளுகி மக்களிடம் இறை நேசர் என்ற பட்டத்தைப் பெற்று விடுகின்றனர். முரீது என்ற பெயரால் மக்களை வழிகெடுக்கும் பித்தலாட்டக்காரர்களும் கூட தாங்கள் நபிகள் நாயகத்தைக் கனவில் கண்டதாகக் கூறித் தான் ஆள் பிடிக்கும் வேலையில் இறங்குகிறார்கள்.

எனவே, மவ்தூதிக்காக நபிகளார் துஆ கேட்டதை ஏற்கலாமா? என்பதை பார்ப்பதற்கு முன்,நபிகளாரை கனவில் காண முடியுமா? என்பது பற்றி அறிந்து கொள்வது அவசியமாகும்.

‘யார் என்னைக் கனவில் காண்கிறாரோ அவர் என்னையே கண்டார். ஏனெனில் ஷைத்தான் என் வடிவில் வரமாட்டான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 610, 6197

இந்தச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு தான் நபிகள் நாயகத்தைக் கனவில் காண முடியும் என்று சிலர் வாதிட்டு வருகின்றனர். இந்த நபிமொழியை இவர்கள் தவறாக விளங்கியுள்ளனர். இந்த நபிமொழியை எவ்வாறு விளங்குவது என்பதற்கு மற்றொரு நபிமொழி துணை செய்கிறது.

‘என்னை யாராவது கனவில் கண்டால் விழித்தவுடன் என்னைக் காண்பார். ஏனெனில் ஷைத்தான் என் வடிவில் வரமாட்டான்” என்பது தான் அந்த நபிமொழி.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6993

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை எவர்கள் கனவில் காண இயலும் என்பதை இந்த நபிமொழி விளக்குகிறது.

‘என்னைக் கனவில் காண்பவர் விழித்தவுடன் நேரிலும் காண்பார்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறுகின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த உலகில் உயிரோடு வாழும் போது மாத்திரம் தான் இது சாத்தியமாகும். அவர்கள் உயிரோடு இந்த உலகில் வாழும் போது ஒருவர் கனவில் அவர்களைக் கண்டால் விழித்தவுடன் அவர்களை நேரில் காணும் வாய்ப்பைப் பெறுவார் என்று இந்த நபிமொழி கூறுகிறது. இன்று ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் கண்டதாகக் கூறினால் விழித்தவுடன் அவர் நேரிலும் அவர்களைக் காண வேண்டும். நகமும் சதையுமாக அவர்களை நேரில் காணவில்லையானால் அவர் கனவிலும் அவர்களைக் காணவில்லை என்பது உறுதி.

எனவே நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்குப் பிறகு எந்த மனிதரும், எந்த மகானும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் பார்க்கவே இயலாது என்பதை இரண்டாவது கருத்துக்கு இடமில்லாமல் இந்த நபிமொழி தெரிவிக்கிறது. இந்த இடத்தில் சிலருக்கு ஏற்படும் ஒரு சந்தேகத்தையும் அதற்கான விளக்கத்தையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

கனவில் ஒருவர் தோன்றி, ‘நான் தான் முஹம்மத் நபி’ என்று கூறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். நபிகள் நாயகத்தின் வடிவில் ஷைத்தான் வரமாட்டான் என்ற நபிமொழியின் அடிப்படையில் கனவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் வந்தார்கள் என்று கருதலாம் அல்லவா? என்பது தான் அந்தச் சந்தேகம்.

‘நான் தான் முகம்மது நபி’ என்று ஒருவர் கூறுவது போல் கனவு கண்டாலும் அது நபிகள் நாயகம் அல்லர். ஷைத்தான் அவர்களின் பெயரைப் பயன்படுத்தியுள்ளான் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும். ஷைத்தான் நபிகள் நாயகத்தின் வடிவத்தை எடுக்க மாட்டான் என்று தான் அந்த நபிமொழி உத்தரவாதம் தருகிறது. ஷைத்தான் தனக்கே உரிய வடிவத்தில் வந்து நான் தான் நபிகள் நாயகம் என்று கூற மாட்டான் என்று அந்த நபிமொழி கூறவில்லை.

‘என் வடிவில் ஷைத்தான் வர மாட்டான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். கனவில் ஒருவர் வந்தால் அவர் நபிகள் நாயகமா அல்லவா? என்று முடிவு செய்வதாக இருந்தால் அவர் நபிகள் நாயகத்தை நேரில் பார்த்தவராக இருக்க வேண்டும். நேரில் அவர்களை எந்த வடிவத்தில் பார்த்தாரோ அதே வடிவில் கனவிலும் வந்தால் வந்தவர் நபிகள் நாயகம் தான் என்று அவரால் அறிந்து கொள்ள இயலும். நபிகள் நாயகத்தின் வடிவத்தைக் காணாத ஒருவரால் இதை அறிந்து கொள்ள இயலாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வடிவத்தை எடுப்பதை விட்டும் தான் ஷைத்தான் தடுக்கப்பட்டுள்ளான். வேறு வடிவத்தில் வந்து நான் தான் நபிகள் நாயகம் என்று கூற மாட்டான் என்று எந்த நபிமொழியும் இல்லை.

நபிகள் நாயகத்தை ஏற்கனவே நேரடியாகக் கண்டவர் தான் கனவில் காண முடியும். அல்லது கனவில் கண்டவர் பின்னர் நேரில் காண முடியும் என்பதைத் தான் இரண்டு நபிமொழிகளும் கூறுகின்றன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பிறகு ’நபிகள் நாயகத்தை இந்தப் பெரியார் கனவில் கண்டார், அந்த மகான் கண்டார், நபியவா;கள் மவ்தூதிக்காக துஆ செய்வதை நான் கனவில் கண்டேன்” என்றெல்லாம் கூறப்படுமானால் அது கட்டுக்கதையாகத் தான் இருக்க முடியும். அல்லது ஷைத்தான் நபிகள் நாயகத்தின் பெயரைப் பயன்படுத்தி அவரை ஏமாற்றியிருக்க வேண்டும் என்பதில் எள்முனையளவும் சந்தேகம் இல்லை.

எனவே, மேற்குறித்த விளக்கங்களிலிருந்து நபிகள் நாயகத்தை இன்று கனவில் காண இயலாது என்பது நிரூபணமாகிறது. அப்படியிருக்க மவ்தூதிக்காக நபிகளார் பிரார்த்தித்ததை நான் கனவில் கண்டேன் என்று ஒருவர் புளுகுவதை ஜமாஅதே இஸ்லாமி சரியென்று வாதிடுகிறதா? நேற்று ஒருவர் நபிகளாரை கனவில் கண்டேன் என்பார். பிறகு நபிகளார் கனவில் தோன்றி மார்க்க சட்டங்களை சொல்லித்தருவதாக கதையளப்பார். இப்படியான வழிகேட்டுக்கான வாயிலைத்தான் ஜமாஅதே இஸ்லாமி திறந்துவிட்டிருக்கிறது.

அபத்தம் - 02

02- மரணித்த பின்னரும் நபிகளார் உலக நடப்புகளை அறிவார்களா?

மவ்தூதி குறித்த மேற்படி சம்பவத்தில் நபிகளார் அவர்கள் மவ்தூதியுடைய மார்க்கப்பணியை அல்லாஹ்விடம் முறையிட்டு, அவரை சிறையிலிருந்து மீட்டு அவர் உயிரை காப்பாற்றுமாறு அல்லாஹ்விடம் வேண்டுகோள் விடுப்பதாக எழுதப்பட்டுள்ளது.

ஒருவர் மரணித்ததற்குப் பின் அவருக்கும் உலகுக்குமிடையிலான சகல தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. உலகில் யார் யார் உயிர் வாழ்கிறார்கள், அவர்கள் மார்க்கத்துக்காக என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பன போன்ற எந்தத் தகவலாக இருப்பினும் எதுவொன்றுமே மரணித்து மண்ணறையில் வாழ்பவரால் அறிந்து கொள்ள முடியாது என்று அல்குர்ஆன் தெளிவாக எடுத்துரைக்கிறது.

‘அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.(23:100)

இந்த நிலையிலிருந்து நபிகளார் கூட விதிவிலக்குப் பெவில்லை என்பதனை பின்வரும் செய்தி உறுதிப்படுத்துகிறது.

“நான் கவ்ஸர் எனும் தடாகத்தில் உங்களை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். யார்என்னைக்கடந்து செல்கிறாரோ அவர் அதனை அருந்துவார். யார் அதனை அருந்துகிறாரோ அவருக்கு ஒரு போதும் தாகம் ஏற்படாது.என்னிடம் சில கூட்டத்தினர்வருவார்கள். அவர்களை நானும் அறிவேன். அவர்களும் என்னை அறிவார்கள். பின்னர்எனக்கும் அவர்களுக்குமிடையே திரையிடப்படும். ‘அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள்’என்று கூறுவேன். ‘உமக்குப் பின்னால் அவர்கள் எதையெல்லாம் புதிதாக உருவாக்கி விட்டனர்என்பது உமக்குத் தெரியாது’ என்று கூறப்படும். ‘எனக்குப் பின் மார்க்கத்தை மாற்றியவர்களுக்குக் கேடு தான், கேடு தான் என்று நான் கூறுவேன்’என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸஹ்ல் இப்னு ஸஅது (ரலி) நூல் : புகாரி - 6585, 4740, 3349

மேற்படி நபிமொழி எமக்குச் சொல்லும் செய்தி என்ன? நபிகளாருக்குப் பின் உயிர்வாழ்ந்தவர்கள் செய்த நடவடிக்கைகள் குறித்த அறிவு நபிகளாருக்கு இல்லை என்பதை ஐயம் திரிபற சொல்கிறது. இந்த நபிமொழியை மறுக்கும் விதத்தில், மவ்தூதியுடன் தொடர்புடைய மேற்படி சம்பவம் எழுதப்பட்டுள்ளமை சிந்திக்க வேண்டிய அம்சமாகும். சத்திய ஸஹாபாக்கள் செய்த வற்றையே நபிகளாரால் அறிய முடியவில்லை எனும் போது,அவர்களுக்கெல்லாம் பல்லாண்டுகளுக்குப்பின் வாழ்ந்த மவ்தூதியின் மார்க்கப்பணியை நபிகளார் அறிந்து வைத்திருந்தார் என்று ஒருவர் எழுதுவாராயின் அது வடிகட்டிய அறியாமை என்பது புலப்படுகிறது.

அபத்தம் - 03

03- அல்லாஹ்வின் வார்த்தைகளை அற்பர்களால் செவிமடுக்க முடியுமா?

ஒரு நபிக்கும் சாதாரண மனிதனுக்கும் இடையிலுள்ள அடிப்படை வித்தியாசம் வஹி எனும் இறைச் செய்தியாகும். நபிமார்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து வஹி வரும். சாதாரணமானவர்களுக்கு வரமாட்டாது. வஹி அருளப்படும் முறைகளில் ஒன்று அல்லாஹ் நபிமார்களுடன் நேரடியாக உரையாடுவதாகும். மூஸா (அலை) அவர்களை தூர் ஸினா மலையடிவாரத்துக்கு அழைத்து உரையாடியமை, முஹம்மது (ஸல்) அவர்களை மிஃராஜின் போது அழைத்து உரையாடியமை இவற்றுக்கான சான்றுகளாகும்.

நபிமார்களை விடுத்து வேறு எவராலும், எவ்வளவு பெரிய ஆன்மீகவாதியாளும் அல்லாஹ்வின் உரையாடலை செவியேற்க முடியாது. அவ்வாறு ஒருவர் ‘நான் அல்லாஹ்வுடன் பேசினேன், அல்லது அல்லாஹ் பேசுவதை நான் செவியேற்றேன்’ என்று கூறுவாராயின் அவர் தன்னை நபியென்கிறார் என்பதே அர்த்தமாகும். இப்படியிருக்க,மவ்தூதிக்காக நபிகளார் அல்லாஹ்விடம் பிரார்த்தித்ததாகவும், நபிகளாரின் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்ளும் விதமாக ‘முஹம்மதே! உம்முடைய துஆ ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது’என்ற சப்தம் வந்ததாகவும், அதனை தான் செவிமடுத்ததாகவும் ஒரு கிறுக்கன் உலரிவைத்துள்ள உலரல் ஜமாஅதே இஸ்லாமியின் அறிவுக்கண்களுக்கு எட்டாமல் போனது வியப்பாக உள்ளது. இதனை இவர்கள் தரிந்து தான் செய்தார்களா? அல்லது தம் இயக்க ஸ்தாபகரின் கீர்த்தியை உயர்த்துவதற்காக கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார்களா?

அபத்தம் - 04

04- ஒருவரை நல்லவரென்று உலகத்தில் தீர்மானிக்க முடியுமா?

இறைநேசர்கள் யார் என்பதை திருமறைக்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

“அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் நேசர்கள் எதற்கும் அஞ்ச மாட்டார்கள். எதற்காகவும் கவலைப்படவும் மாட்டார்கள்.அவர்கள் விசுவாசம் கொண்டு, (இறைவனை) அஞ்சி நடப்பார்கள்.” (10:62-63)

யாருடைய உள்ளத்தில் ஈமானும் இறைவனை அஞ்சி நடக்கும் தக்வாவும் உள்ளதோ அவர்கள் அனைவரும் இறைநேசர்கள் என்று இவ்வசனம் சொல்கிறது. இவ்விரண்டு பண்புகளையும் மனிதக்கண்களால் எடைபோட முடியாது. உலகில் எமது பார்வையில் மகானாகத் திகழ்ந்தவர் மறுமையில் மகாபாவியாக இருக்கலாம். உலகில் எமது கண்ணோட்டத்தில் பாவியாக இருப்பவன் மறுமையில் மிகச் சிறந்த பேறுபெற்றவனாகத் திகழலாம். எனவே, ஒருவரை நல்லவர் கெட்டவர் என்று தீர்மானிக்கும் அதிகாரம் இறைவனுக்கு மட்டுமே உரிய அதிகாரமாகும். யாரைப்பற்றி இறைவன் நபிகளாருக்கு இவர்நல்லவர் என்று அறிவித்துக் கொடுத்தானோ அவரைப்பற்றி மட்டும் அல்லாஹ்வின் தூதர்‘இவர் சுவர்க்க வாசி’ என்று கூறியுள்ளார்கள். சுவனத்தைக் கொண்டு நற்செய்தி கூறப்பட்ட 10நபித்தோழர்களும் இவ்வாறு இறைவனால் நபிகளாருக்கு அறிவிப்புச் செய்யப்பட்டவர்களே.

நபிகளார் யாரைப் பற்றி எதுவும் சொல்ல வில்லையோ அவரின் மறுமை முடிவு அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது. இதுவே ஒரு முஃமினுடைய அடிப்படை நம்பிக்கை. ஆனால், ஜமாஅதே இஸ்லாமி இந்த அடிப்படையையும் தகர்க்கும் விதமாக எல்லைக்கடந்து போய் தமது இயக்கத்தலைவரை புகழ்ந்துரைக்கும் விதமாகவே மேற்படி சம்பவம் உள்ளது.

மவ்தூதி நரகவாதியென்று நாம் ஒருபோதும் கூறவில்லை. கூறுவும் மாட்டோம். கூறவும் கூடாது. ஆனால், மவ்தூதியை சுவனவாதியாக சித்தரிக்க முனைவதைத்தான் நாம் தவறு என்கிறோம். நபிகளார் ‘மவ்தூதி இந்த மார்க்கம் ஓங்க வேண்டும் என்பதற்காக உழைக்கிறார்.அவரது உயிரை காப்பாற்று!’ என்று அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறார். அல்லாஹ்வும் நபிகளாரின் பிரார்த்தனையை தான் அங்கீகரித்து விட்டதாக பதிலுரைக்கிறான் என்றால், இதன் அர்த்தம் என்ன?

‘நபிகளாரின் பிரார்த்தனைக்கும், அல்லாஹ்வின் மன்னிப்புக்கும் உரித்தான மா மனிதரே மவ்தூதி! அல்லாஹ் அவரின் மார்க்கப்பணியை அங்கீகரித்து விட்டான். எனவே, மவ்தூதி ஓர்இறை அங்கீகாரம் பெற்ற நல்லடியார். அவரின் கருத்துக்களும், பிரச்சாரங்களும், உரைகளும்,எழுத்துக்களும் இறைவனால் பொருந்திக்கொள்ளப்பட்டவை. யாரும் அவாpன் பிரச்சாரத்தை கண்மூடி பின்பற்றலாம்’ என்ற நச்சுக்கருத்தைத் தானே இச்சம்பவத்தின் ஊடாக மேற்படி நூலில் விதைக்கப்பட்டுள்ளது.

ஜமாஅதே இஸ்லாமி என்ற இயக்கத்தை மக்கள் அங்கீகரிக்க வேண்டுமாயின், அதன் பால் மக்கள் அணியணியாக திரள வேண்டுமாயின் அதன் தலைவர் மவ்தூதியை மகானாக்க வேண்டும். இறை அங்கீகாரம் பெற்ற மனிதராக தரமுயர்த்த வேண்டும். ஆன்மீக ரீதியான உயர் அந்தஸ்தை வழங்க வேண்டும். அப்போது தான் இலக்கை எட்டலாம். அல்லாஹ்வின் தூதரே மவ்தூதிக்காக பிரார்த்தித்திருக்கும் போது நீ எப்படி மவ்தூதியின் பிரச்சாரத்தை,கருத்துக்களை தவறு என்று கூறலாம்’ என்ற நிலையை பொது மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்ற குள்ள நரிச்சிந்தனையின் வெளிப்பாடாகவே இக்கருத்துக்கள் புனையப்பட்டுள்ளன.

ஈமானிய அடிப்படையை தகர்க்கும் இத்துனை நச்சுக்கருத்துக்களை உள்ளடக்கிய மேற்படி சம்பவத்தை ஜமாஅதே இஸ்லாமியினாலும், ஹஜ்ஜூல் அக்பரினாலும், அகார்முஹம்மதினாலும் எப்படி ஜீரணிக்க முடிந்தது? இயக்கப்பக்தி இவர்களின் அறிவுக்கண்களை அடைத்து விட்டது என்பதை விட வேறு எதனையும் நமக்கு பதிலாக கூறமுடியவில்லை.

‘அறிவியல் உலகை மூடியிருக்கும் அறியாமை இருள்’ எனும் கருப்பொருளில் இஜ்திமா நடாத்தும் ஜமாஅதே இஸ்லாமியினரே! முதலில் உங்கள் சிந்தனையை மூடியிருக்கும் இருளை அகற்ற முயற்சி செய்யுங்கள். சத்தியத்துடன் அசத்தியத்தை இரண்டரக்கலந்து தன்னை நம்பி வரும் முஅய்யித், முஸாயித், முன்தஸிப் ஊழியர்களை வழிகேட்டின் பால் அழைத்துச் செல்லும் அயோக்கியத்தனத்திலிருந்து இதன் பிறகாவது உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள். பொது மக்கள் இவர்களின் வெளிவேஷத்தில் மயங்கி தம் சிந்தனையை அடகு வைத்து விடாது அறிவு புர்வமாக நடந்து கொள்ளுங்கள். யார் எதை சொன்னாலும் அது மார்க்கம் தான் என்ற தக்லீது கலாச்சாரத்திலிருந்து மீண்டு, எவருடைய கருத்தையும் ‘குர்ஆன் ஸூன்னா’ எனும் உரை கல்லில் உரசிப்பார்த்து தெரிவு செய்யும் போக்கை கைக்கொள்ளாத வரை இவர்கள் போன்றவர்கள் வளரவே செய்வார்கள்.

அல்லாஹ் எம் அனைவருக்கும் சத்தியத்தை சத்தியமாகவும், அசத்தியத்தை அசத்தியமாகவும் வேறு பிரித்துக் காட்டுவானாக! (ஆக்கம் : எம்.டீ.எம்.பர்ஸான் (ஆசிரியர் அழைப்பு மாத இதழ்))

Home            Sri Lanka Think Tank-UK (Main Link)